Apr 8, 2018

இசைவோம்.. இசையாவோம்.. இளையராஜாவினால்! – 2


Courtesy - Google God
முதல் முயற்சி என்பதில் நாம் எப்போதும் மிகுந்த சிரத்தை காட்டுவோம். வெற்றி குறித்த பயத்தையும் பதற்றத்தையும் விட, அந்த முயற்சியின் வீச்சு மிகப்பெரிதாக இருக்கும். அது வெற்றியடையும்போது, எல்லாமே தலைகீழாக மாறும். இரண்டாவது, மூன்றாவது படைப்பை உருவாக்கும்போது, முயற்சியின் மீதான நம்பிக்கையை துருத்திக்கொண்டு நிற்கும் வெற்றி குறித்த பயம். கூடவே வெற்றி மமதையும் தலைக்கு மேலே அங்குமிங்கும் அசைந்தாடும். திரைப்பட இயக்குனரான எவரும் இதற்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ’மெல்ல பேசுங்கள்’ திரைப்படம் அப்படியான ஒன்று. 
Courtesy - Google God

’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்திற்குப் பிறகு பாரதி – வாசு இயக்கத்தில் வெளியான மூன்றாவது திரைப்படம் இது. இடையே மதுமலர் என்ற படத்தை இருவரும் இயக்கியிருந்தாலும், அதற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். மெல்ல பேசுங்கள் படத்தில் மீண்டும் இளையராஜாவுடன் இருவரும் கூட்டணி அமைத்திருந்தனர். பருவ வயது காதலைப் படமாக்கிப் பெரும் வெற்றி பெற்றபிறகு, எந்த genreல் படம் செய்வது என்பது ஆகப்பெரும் குழப்பம். 

அதனைக் கடந்துதான், 1983ஆம் ஆண்டு மெல்லப் பேசுங்கள் படமும் உருவாகியிருக்க வேண்டும். இது romantic comedy genre என்று சில இணையதளங்கள் சொல்கின்றன. இப்போதுவரை இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் நிழல்கள், வறுமையின் நிறம் சிகப்பு, புதுமைப்பெண் போன்ற திரைப்படங்களில் சாயலில் இது உருவாகியிருக்கக்கூடும் என்று மனம் சொல்கிறது. காரணம், இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள். 

Courtesy - Google God
90களில் டிவி சீரியல்களில் வலம்வந்த, சில காலம் சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராக இருந்த வசந்த், மெல்ல பேசுங்கள் படத்தில் நாயகனாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமான இன்னொருவர் பானுப்ரியா. ஆகச்சிறந்த தமிழ் நடிகைகளுள் ஒருவர். இவர் நன்றாக நடனமும் ஆடுவார் என்பது இன்னொரு சிறப்பு. 
 
முதலிரண்டு படங்களில் சோமசுந்தரேஷ்வர் என்ற ராஜேஷ்வரின் கதை வசனத்தைப் பயன்படுத்திய பாரதி – வாசு, இந்தப் படத்தின் கதைக்கு எம்.எஸ்.மதுவையும், வசனத்துக்கு கலைமணியையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். 50களில் இருக்கும் சிலருக்கு, இது மிகவும் பிடித்த படமாகவும் இருக்கக்கூடும். ஆனாலும், இந்தப் படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’ அளவுக்கு பெருவெற்றி பெறவில்லை என்பதை யாரும் சொல்லாமலேயே புரிந்துகொள்ள முடிகிறது. காரணம், இதன் பாடல்கள் பெருமளவு கவனத்தைப் பெறாதது தான். 
Courtesy -Twitter
’செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு’ என்ற பாடல் பெரும்பாலான இசைஞானி ரசிகர்கள் அறிந்த ஒன்று. செவ்வியல் தன்மை கொண்டதாகத் தொடங்கும் இந்தப் பாடல், எந்த இடத்தில் இரண்டு காதலர்களின் உரையாடலைப் போல மாறுகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. உரையாடல் என்பதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது. தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இந்த பாடலைப் பாடியிருக்கின்றனர்.

‘கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ’ என்ற பாடல், 80களின் துள்ளல் இசையை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறது. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, ஒரு தனி ஆல்பத்துக்கான தன்மையுடன் இளையராஜாவின் இந்தப் பாடல் அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். (இது எனது கருத்து மட்டுமே..) காதலைச் சொல்ல எத்தனிப்பவர்களின் மனநிலையை விளக்க, இது மிகச்சரியான பாடல். இதனைப் பாடியவர் கிருஷ்ணசந்தர் என்று தரவுகள் கிடைக்கின்றன. இவர் பாடிய பிற பாடல்கள் என்னவென்று தெரியவில்லை.

’காதல் சாகாது’ பாடல் வழக்கமான டூயட் பாடல் அல்ல. இதனை முதலில் கேட்கும்போது இருந்த அந்நியத்தன்மை, அடுத்தடுத்த தடவைகளில் காணாமல் போகிறது உண்மை. மலேசியா வாசுதேவனும் ஜானகியும் தங்களது வழக்கமான மேதைமையை இதில் காட்டியிருக்கின்றனர்.

’உயிரே உறவில் கலந்தேன்.. உணர்வில் கலந்தேன்..’ பாடலின் இடையே வரும் தனியிசைக்கும் பாடல் வரிகளோடு சேர்ந்தியங்கும் இசைக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. இவற்றைக் கலந்து ஒன்றிணைப்பதில் தான் இளையராஜா ஜித்தன் என்று நிரூபிக்கிறார். ஒரு வகையில், இது மற்றவர்களின் இசையமைப்பில் அரிதாகவும், இளையராஜாவின் இசையில் எப்போதும் இருக்கும் ஒரு சிறப்பம்சம். அதோடு, சிறு சிறு வாத்தியங்களின் ஒலியையும் ஆங்காங்கே தெளித்து, ஒரு கொலாஜ் எபெக்ட் தருவதில் ராஜா ராஜாதான். இது, எஸ்.ஜானகியின் சோலோ பாடல்.
https://www.youtube.com/watch?v=YpPKJnc4Xr0


Courtesy - Google God
நான்கு பாடல்கள் இந்தப்படத்தில் இருந்தாலும், அதற்கு நா.காமராசன், புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், வைரமுத்து என்று நான்கு பாடலாசிரியர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. ஆனாலும், நாம் இளையராஜா – வைரமுத்து காம்பினேஷனையே புகழ்ந்துகொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

சந்தானபாரதியும் வாசுவும் தனித்தனியாகப் பிரிந்து படம் இயக்கச் சென்றதால், நாம் இழந்தது இப்படிப்பட்ட ஹிட் பாடல்கள் கொண்ட ஆல்பங்களையும் தான். அதன்பிறகு வாசுவின் படங்களுக்கு எளிமையிற் சிறந்த பாடல்கள் பல தந்த ராஜா, சந்தானபாரதியின் படப்பாடல்களில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பார். குணா, மகாநதி, சின்ன மாப்ளே, சின்னவாத்தியார் என்று அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

மேற்கண்ட வார்த்தைகள் சரியா, தவறா என்று இளையராஜாவினால் மட்டுமே பதில் சொல்ல முடியும். ஆனாலும், அது அவரது நினைவின் அடுக்குகளில் இருந்து மேலெழுமா என்று தெரியாது. ஏனென்றால் உதிர்ந்த சிறகுகளை விசிறியடித்துவிட்டு முளைத்தெழும் இளஞ்சிறகுகளால் உயரப் பறப்பதே சாதனைப் பறவைகளின் வழக்கம்!

Mar 4, 2018

இசைவோம்.. இசையாவோம்.. இளையராஜாவினால்..!


photo courtesy: g.venkatram


 இளையராஜாவின் இசையைப் பற்றி இனி யாராவது சிலாகித்தால், அது கடலில் கலக்கும் மழைத்துளி போன்றே இருக்கும். கடல் நிரம்பி வழிகிறது என்று மழை பொய்த்துப்போனால் நிலைமை என்னவாகும்? அதனால், என்னைப் போன்று சிலர் தினம்தினம் புதிதாக வருவார்கள்; அவரது புகழ் பாடுவார்கள். இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும், இது நிகழ்ந்துகொண்டே இருக்கும். காரணம், அப்போதும் அவரது இசை புதிதாகவே கருதப்படும்.
இளையராஜாவின் இசையில் நிரம்பியிருக்கும் எளிமையே இதற்குக் காரணம். ஆனால், அந்த எளிமையை இசையில் புகுத்துவது மிகக்கடினம். இசை என்றில்லை, எந்தவொரு கலையிலும் எளிமை வாய்க்கப்பெற்றவனே அழியாத புகழ் பெறுவான். அதனால்தான், நான்கே கோடுகளில் காந்தியை வரைந்த ஆதிமூலத்தின் ஓவியம் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது.
அந்த எளிமையே, ஒரு நவீனத்தன்மையையும் ஒரு கலைக்கு அளிக்கிறது. நவீனம் என்றால் பதறவேண்டாம். புதிய ஒலிகளும் கருவிகளும் அதனை நமக்குக் கடத்தும் நுட்பமும் மட்டுமே புதுமையைத் தந்துவிடாது. புதிதாகத் தோன்றும் எதுவுமே நவீனம் தான். நம் மனதில் புத்துணர்வை உருவாக்கும் எதுவுமே நவீனம் தான். 
photo courtesy : google god
 அந்த வகையில் 1980களில் இளையராஜா இசையமைத்த பாடல்களில் பல, இன்றும் நவீனமாகத்தான் நம் காதுகளுக்குக் கேட்கிறது. இப்படியொரு நவீனம் நிரம்பிய இசை, ஒரு படத்தின் அனைத்து பாடல்களிலும் இருந்தால் எப்படியிருக்கும்? காலம் கடந்தும், அது ஹிட் ஆல்பமாகவே கருதப்பட்டால் எப்படியிருக்கும்? இவ்வாறு வகைப்படுத்தினால் இளையராஜா இசையமைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நான்கில் இரண்டு பங்கு இந்தக் கணக்கில் வந்துவிடும். இது ஒரு உத்தேசக் கணக்குதான்.
அதுபோல, ஒவ்வொரு படத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஹிட் பாடலாவது கொடுத்து விடுவார் என்பது இளையராஜா மீது அவரது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை. அதற்காக, அந்தப் படங்களில் மீதமுள்ள பாடல்கள் நன்றாக இருக்காது என்று அர்த்தம்கொள்ள முடியாது; அந்தப் படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப, படம் வெளியான காலகட்டத்துக்கு ஏற்ப, அப்போதைய வணிக ஜாம்பவான்கள் விருப்பத்துக்கு ஏற்ப, சில பாடல்களைத் தந்திருப்பார் இளையராஜா. இந்தக் காரணங்களால் மட்டுமே, அந்த பாடல்களைத் தனித்துக் கேட்பதில் நமக்குச் சிரமம் இருக்கும்.
 இதையெல்லாம் மீறி, சில படங்களில் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கி இருப்பார் இளையராஜா. இந்தப் படங்கள் எல்லாம் வெளியானதா என்று நினைக்கும் அளவிற்கு, சிலவற்றின் பெயர் நம் மனதில் உணர்வுகளை எழுப்பும். அத்தனை குறைகளையும் மீறி, இளையராஜாவின் இசையால் அவை நினைவு கொள்ளப்படும். இந்த வரிசையில் பல படங்கள் உண்டு. அதனைப் பட்டியலிட்டால், அதில் பணியாற்றிய கலைஞர்கள் வருத்தப்படுவார்கள். அதனால், அதுபற்றிப் பேசாமலிருப்பதே நல்லது.
இளையராஜாவின் ஹிட் ஆல்பங்களைப் பற்றி மட்டும் பார்க்கத் தொடங்கினால், அவை எத்தனை நாட்கள் ஓடியவை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அல்லது அந்தப்படம் இசைக்காகவே வெளியான படமா என்பதை நோக்க வேண்டும். இதில் எதிலும் சேர்த்தி இல்லாமல், சமீபத்தில் என் மனதில் ஒட்டிக்கொண்டது ‘கண்ணுக்கோர் வண்ணக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள். 
photo courtesy : google god
 யூடியுபில் இந்தப் படத்தின் ஒரு காட்சி கூட கிடைக்கவில்லை. கூகுள் ஆண்டவரும் கூட கைவிட்டுவிட்டார். அப்புறம்தான், இந்தப் படம் வெளியாகவே இல்லை என்று தெரிந்தது. அதனாலேயே இதனைப் பற்றி எழுதுகிறேன். இதில் ஒவ்வொரு பாடலும் நம் மனதுக்கு புத்துணர்வைத் தருகிறது. புது உணர்வைப் பெற வைக்கிறது.

சைக்கிள் மணி ஒலிக்கும் சத்தம் மற்றும் ஹலோ என்ற குரலுடன் தொடங்கும் “கானம் தென் காற்றோடு” என்ற பாடல் தரும் உற்சாகம் அளவிட முடியாதது. சோகம் நிரம்பிய இளையராஜாவின் குரலைக் கேட்டுவிட்டு, இதயம் படத்தின் ’ஏப்ரல் மேயிலே’ பாடலைக் கேட்டால் எவ்வளவு வித்தியாசம் தெரியும். அதே வித்தியாசம், இதிலும் தென்பட்டது.
’பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ’ பாடலில் மனோ துள்ளிக் குதித்திருப்பார். வழக்கமான நாயகர்களுக்கான சோலோ பாடல் என்ற அளவிலேயே இது இருக்கும். ஒருவேளை, இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அக்னி நட்சத்திரத்தில் ‘ராஜா ராஜாதி ராஜன்’ பாடல் போல இதுவும் நினைவில் நின்றிருக்கக்கூடும்.
’வாலிபம் வானவில்’ என்ற பாடல் அனுராதா, சுனந்தா இருவரும் பாடியதாகத் தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. ஆனால், இதில் ஒலிக்கும் குரல் சுரேஷ் பீட்டரை நினைவுபடுத்துகிறது. https://www.youtube.com/watch?v=LfMV35b1_CE
துளித்துளி மழையாய் என்ற பாடலை மனோவும் பி.சுசீலாவும் பாடுகிறார்கள். பி.சுசீலாவின் குரல் சின்னச்சின்ன ஆசை பாடிய மின்மினியின் குழந்தைமையைப் பின்னுக்கு தள்ளிவிடுகிறது. https://www.youtube.com/watch?v=NAwlykNhm0Q

photo courtesy : google god
 லதா மங்கேஷ்கரின் குரலில் ஒலிக்கும் ‘இங்கே பொன் வீணை’ என்ற பாடல், வழக்கமான இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம். இதில், லதாவின் குரல் ஒருபக்கம் ஒலிக்க, பின்னணியில் ஒரு இசை குறுகியும் பெருகியும் ஒலிக்கும். தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை, இப்போது எத்தனை ட்ராக்குகள் பிரித்துப் பயன்படுத்துகிறார்களோ, அவற்றையெல்லாம் அந்த நுட்பம் அறிமுகமான காலத்தின் தொடக்கத்திலேயே சோதித்திருக்கிறார் என்பது நிச்சயம் அதிசயம் தான். குறிப்பாக, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கேட்கும்போது, இந்த பாடல் வேறுவிதமான ஒரு அனுபவத்தை வழங்குகிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆஷா போன்ஸ்லே ஒரு டூயட் பாடல் ‘உன்னை நான் பார்க்கையில்’. இதே பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தனியாகப் பாடும்போது வேறுவிதமான உணர்வெழுகிறது. எஸ்பிபி பாடும்போது சுகமும், கேஜேஜே பாடும்போது சோகமும் தெரிகிறது. ஒரே பாடலை இருவேறு சூழலுக்குப் பயன்படுத்துவது இளையராஜாவுக்கு கைவந்த கலை என்பதால், அதனைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
https://www.youtube.com/watch?v=1hCjzBTu4nM
‘யார் அழுது யார் துயரம் மாறும்’ என்ற பாடல், அதில் இடம்பெற்றுள்ள வரிகளைப் போலவே சோகம் தாங்கி ஒலிக்கிறது. இதையும் கே.ஜே.ஜேசுதாஸும் இளையராஜாவும் தனித்தனியே பாடியிருக்கின்றனர். இளையராஜாவின் குரலிலேயே சோகம் அதிகம் நிரம்பியிருப்பதாகக் கருதுகிறேன்.
கண்டிப்பாக, இளையராஜாவின் இசையைப் போற்றும், பாதுகாக்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இசைப்பாதையில் வழிப்போக்கர்களான என்னைப் போன்றவர்களுக்கு, இது புது அனுபவத்தையே தரும்.
‘கண்ணுக்கோர் வண்ணக்கிளி’ என்ற பெயரைப் பார்த்ததும், கிராமத்து கீதங்களை மட்டுமே கேட்பேன் என்று நினைத்தேன். அதற்கு நேரெதிரான உணர்வைத் தந்தது இதன் பாடல்கள். இளையராஜாவின் பெயர் போஸ்டரில் இடம்பெறும் என்ற தைரியத்தில், அந்த படக்குழுவினர் இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மிகையாகத் தோன்றினாலும், இதை சொல்லத்தான் வேண்டும். இளையராஜா என்ற பெயரே என்றென்றைக்கும் இளமையானது தானே!

Feb 17, 2018

பாஜக ஆடும் ‘நெல் - உமி’ விளையாட்டு!

 

உதய் பாடகலிங்கம்

எல்லாத் தேர்வுகளிலும் வெற்றிபெறும் மாணவனுக்கு, ஆண்டு இறுதியை நினைத்து எந்தக் கவலையும் இருக்காது. ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை வசப்படுத்திவரும் பாஜகவும் இத்தகைய மனநிலையில்தான் இருக்க வேண்டும். ஆனால், பாஜகவோடு கூட்டணி சேர்ந்த கட்சிகள் இதே மகிழ்ச்சியை உணர்கின்றனவா? இந்தக் கேள்விக்கு, மிக வேகமாக ‘இல்லை’ என்று பதில் சொல்லிவிடலாம். மகாராஷ்டிராவிலும் ஆந்திராவிலும் பாஜக கூட்டணிக்கு நேர்ந்திருக்கும் பின்னடைவே இதற்கு உதாரணம்.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தோடு இணைந்து போட்டியிட்டு ஆந்திராவில் பாஜக பெரும்வெற்றி பெற்றது. அடுத்த இடத்தைப் பிடித்தது ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். இந்தத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவைத் தேடிப்பிடித்து கூட்டணி அமைத்தவர் சந்திரபாபு. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்குமளவுக்கு அவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டினார். அதனாலேயே, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பாஜகவுக்குப் பகிரங்க ஆதரவைத் தெரிவிக்க இயலாமல் தவித்தார். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளின் நிலை
பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று தற்போது சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பிவருகிறார். கடந்த ஓராண்டாக, தெலுங்கு தேசம் ஆட்சியை பாஜகவினர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருவதே இதற்குக் காரணம். கூடவே, மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்கட்சிகளை தெலுங்கு தேசம் ஆதரித்ததும் சேர்ந்துகொண்டது. எப்போது கூட்டணி உடையும் என்ற நிலையே ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிலவுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிலைமை இன்னும் மோசம். அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே, பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே முட்டல் ஏற்பட்டது. அதிக இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சொல்ல, சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை பெற, வேறு வழியில்லாமல் கூட்டணி சேர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது சிவசேனா. இந்தக் களேபரம் நிகழ்ந்து முடிவதற்குள், சிவசேனா கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபுவைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது பாஜக.
அதன்பின் கடந்த நான்காண்டுகளாகவே, அங்கு நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சி ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ ரகம்தான். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. கொள்கைபூர்வமாக, பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. ஆனாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கண்டிப்பாகக் கூட்டணி கிடையாது என்று இப்போதே அறிவித்துவிட்டார் உத்தவ்.
இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் கூட்டணியில் முறிவு என்றால் பரவாயில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுகிறது பாஜக. வரப்போகும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது பாஜக.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, நாகா மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டு சேர்ந்திருந்ததைக் கவனிக்க வேண்டும். நாகாலாந்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அந்தக் கட்சி உட்பட 11 கட்சிகள் முடிவெடுத்தன. நாகாலாந்து மாநில பாஜகவும் முதலில் அதற்கு ஒப்புக்கொண்டது; இப்போது கட்சி மேலிடத்தின் அறிவுரைக்கேற்ப, கூட்டணியை மாற்றிக்கொண்டு போட்டியில் இறங்கியுள்ளது.
தமிழகம் என்னும் உதாரணம்
பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை எப்படிக் கையாள்கிறது என்றறியத் தமிழகத்திலுள்ள நிலவரமே போதுமானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தன.
பாஜகவின் கொள்கைபூர்வமான முடிவுகளுக்கு, இந்தக் கட்சிகள் தற்போது அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பாஜக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் நீடிக்கின்றன என்ற சந்தேகமே மேலெழுகிறது. உள்ளாட்சித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ உடனடியாக வந்தாலொழிய இதனைக் கண்டுபிடிக்க வேறு வழியில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் 48 கட்சிகள் அங்கம் வகிப்பதாகச் சொல்கிறது வீக்கிபீடியா. மேலே சொன்ன ஐந்து கட்சிகளும் அவற்றில் அடக்கம். ஆனால், இதில் ஒரு கட்சியும் பாஜகவின் கொள்கைகளையோ, திட்டங்களையோ ஆதரிக்கவில்லை. இப்படியே, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை இருந்தால் என்னாவது?

கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் முதலான மாநிலங்களில் பாஜகவுக்குக் கூட்டணிக் கட்சிகளின் தயவு வேண்டாமென்ற சூழலே நிலவுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணியை விட்டு வெளியேறும்பட்சத்தில், ஜெகன்மோகன் ரெட்டியுடன் கூட்டணி வைக்க பாஜக தயங்காது என்று கூறப்படுகிறது. அது போலவே, தெலங்கானாவிலும் அமித் ஷாவுடன் கைகோக்கத் தயாராக இருக்கிறார் சந்திரசேகர ராவ்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் துடைத்தெறியும் எண்ணத்திலுள்ள மம்தா பானர்ஜி, பாஜகவுடன் அணி சேருவதைவிடத் தனது தாய்க் கழகமான காங்கிரஸுடன் கூட்டணி சேரவே விரும்புவார். ஆனால், மேற்கண்ட மூன்று கட்சிகளையும் தவிர்க்கவே இப்போதுவரை அவர் முயற்சித்துவருகிறார்.
ஒடிசா மாநிலச் செய்திகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுவிடாத வகையில், அங்கு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. ஜெயலலிதா, மம்தா போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பு நவீனும் பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.
பீகாரைப் பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, உபேந்திர குஸ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுடனான பாஜக உறவில் எப்போதோ ஓட்டை விழுந்தாகிவிட்டது. சத்தம் காட்டாமல் இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான்கூட, தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தனது குரலை உயர்த்தலாம். நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் வராது என்று உறுதியளிக்க, இரு கட்சிகளுமே முன்வராது. ஏனென்றால், கடந்த தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாலேயே, தே.ஜ.கூட்டணியை விட்டு விலகியவர் நிதிஷ். இப்போது, அவர் அதே பாஜகவின் ஆசியுடன் ஆட்சி நடத்திவருகிறார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கூட்டணியோடு சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது பாஜக. மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் இந்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி, புதுச்சேரியில் விரைவில் மாற்றம் ஏற்படுமென்று கூறிவருகிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் பாஜக கூட்டணி உறுதியற்ற தன்மையுடன் இயங்கிவருகிறது.
இப்படியொரு நிலையில், பெரிய மாநிலக் கட்சிகளுடன் உறவைத் துண்டித்துக்கொள்ள பாஜக ஏன் விரும்புகிறது? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற ஒற்றைச் சொல்லினால் வெற்றி பெற்றதுபோல, இந்த முறையும் அதையே பின்பற்றலாம் என்ற அதீத நம்பிக்கை இதன் பின்னிருக்கக் கூடும். ஆனால், அதிசயங்கள் அடிக்கடி நடவாது என்பதை பாஜகவினர் நினைவில்கொள்ள வேண்டும். அதீத தன்னம்பிக்கைதான் 2004இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ கோஷமாக வெளிப்பட்டது. ஆனால் அந்தக் கோஷம் பாஜகவைக் கரைசேர்க்கவில்லை. அதன் முன்னேற்றத்துக்கு அணை போட்டுவிட்டது.
மாநிலக் கட்சிகளை பாஜக பயன்படுத்தும் முறை
சமீப காலமாக, மாநிலக் கட்சிகளின் பலத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போக்கைக் கடைப்பிடித்துவருகிறது பாஜக. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையான அத்தனை வித்தைகளையும் தன்னில் வளர்த்துக்கொண்ட பிறகு, அந்த மாநிலத்தில் ஓரளவேனும் காலூன்றிக்கொண்ட பிறகு, மெதுவாக அந்தக் கட்சிகளை விட்டு விலகிக்கொள்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாகத் தோன்றலாம். ஆனால், சந்திரபாபு நாயுடுவும் உத்தவ் தாக்கரேவும் இதைத்தான் சொல்லிவருகின்றனர்.

1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கவிழக் காரணமாக இருந்தார் ஜெயலலிதா. அவரின் முடிவு, பாஜகவை இப்படிப்பட்ட கூட்டணிக் கணக்குகளுக்குள் தள்ளியிருக்கலாம். வெற்றி பெறும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசில் பதவி வகிக்கும் நேரத்தில், மாநிலத்தில் ஓர் அடி விலகிச் செயல்படுவதும்கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், கூட்டணி பலமில்லாமல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியைப் பாஜக பெற முடியாது என்பதே உண்மை. குஜராத் சட்டமன்றத் தேர்தல் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல மாநிலங்களில் வலுவான கூட்டணி இல்லாமல் பாஜக வெற்றி பெற இயலாது என்று அரசியல் பண்டிதர்கள் போட்ட கணக்கு பலிக்கவில்லை என்பது உண்மைதான். மோடி மந்திரமும் வளர்ச்சி நாயகன் பிம்பத்துக்கு ஆதரவாக அடித்த அலையும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தன. பத்தாண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தியும் அதற்கு வலு சேர்த்தது. பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஆனால், அதிசயங்கள் அரிதாகவே நிகழும் என்பதை மறந்துவிடக் கூடாது. வரும் தேர்தலில் அலை வீசுவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.
புதிய தலைமையின் கீழ் தேர்தல் களம் காணும் காங்கிரஸ் கட்சி, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்து, இந்தியாவின் பிற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டு சேர முடியும். தேசியவாத காங்கிரஸுடனோ, திரிணாமுல் காங்கிரஸுடனோ, ஐக்கிய ஜனதா தளத்துடனோ கூட்டணி சேர முடியும். சிவசேனா, தெலுங்கு தேசம் உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் சாத்தியம் காங்கிரஸுக்கு உண்டு. சத்தியமாக, பாஜகவுக்கு அது கிடையாது.
ஆனாலும், எதிரியின் பலத்தைப் பெறும் வாலியைப் போல, நண்பனின் அத்தனை பலங்களையும் தனதாக்கும் சாதுர்யத்தைப் பின்பற்றுகிறது பாஜக. கூட்டணிக் கட்சியின் பலத்தைத் தெரிந்துகொண்டு, கூட்டுறவைக் குலைப்பதிலேயே குறியாக இருக்கிறது.
நாளை, இதே போன்ற முடிவுகள் பீகாரிலும் காஷ்மீரிலும் கூட ஏற்படலாம். அதைச் சாத்தியப்படுத்த, சில தலைவர்களின் உரசல் பேச்சுகள் போதும். அதுவே, கூட்டணிக் கட்சிகள் மீது போதுமான அளவுக்குக் கறையைப் பூசிவிடும். ஒரே தேசம்; ஒரே கட்சி என்று கேட்பதற்கு, மிக நன்றாக இருக்கும். ஆனால் அதன் கீழ் ஜனநாயகம் என்றுமே தழைத்தோங்க முடியாது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், அறுதிப் பெரும்பான்மையோடு, இந்த தேசம் முழுக்க தன் ஆட்சியை விரவ நினைக்கிறது பாஜக.
‘நீ நெல் கொண்டுவா; நான் உமி கொண்டுவருகிறேன்; நாம் ஊதி ஊதித் தின்னலாம்’ என்பதை, இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகளே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், மாநிலக் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளும் என பாஜக நம்புகிறதா? சிவசேனாவும் தெலுங்கு தேசமும் பெறப்போகும் வெற்றிகளும் தோல்விகளுமே, இதற்கான சரியான பதிலைத் தரும்.

நன்றி :  www.minnambalam.com

 

Feb 12, 2018

மூன்று தற்கொலையாளர்களும் ஒரு தன்னம்பிக்கைக் கதையும்..

தற்கொலை செய்யும் எண்ணம் மனதில் ஆழிப்பேரலையாக உருவெடுக்கும்போது, தன்னம்பிக்கை சிறுதுகளாகிப் போகும்; அந்தக் கணத்தைக் கடந்துவருவதை எந்த வார்த்தைகளாலும் ஈடுகட்ட முடியாது. இதனை மிக அழுத்தமாகச் சொல்லும் படம், 2016ல் மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையில ரித்விக்ரோஷன்’ திரைப்படம். நான் சீரியசாக சொன்னதை, படத்தில் சிரிக்கச் சிரிக்கக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயல்பற்றுக் கிடைக்கும் வாழ்க்கை ஒன்றாகத் திரண்டு, உச்சம் நோக்கிச் சென்றால் எப்படியிருக்கும்? இப்படியொரு கனவைத் தன்னுள் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சாமான்ய வாழ்க்கையைச் சலிப்புடன் நிகழ்த்திக்கொண்டு, அசாதாரணமான கனவுகளைச் சுமப்பதே பலரது வழக்கம். அப்படியொரு மனிதனாகத்தான், இந்த கதையின் நாயகன் கிருஷ்ணன் வருகிறான். 

கதைப்படி தற்கொலைக்கு முயலும் மூன்று நபர்களில், கிருஷ்ணனே பிரதானமானவன். ஆனால், படத்தின் திரைக்கதை ஜியோ என்ற நபரிலிருந்து தொடங்குகிறது. தனது காதலிக்குத் திருமணம் நடப்பதை அறிந்து பதைபதைப்புடன் அவன் வருகிறான். எந்த வசதியுமல்லாத ஜியோவை திருமணம் செய்வதால் என்ன பயன் என்று கேட்கிறாள் அவனது காதலி. அதனால் மனமுடையும் ஜியோ, வழியில் தென்படும் தற்கொலைப்பாறையின் மீதேறுகிறான். கீழே குதிக்க நினைக்கும்போது, தரையில் இருக்கும் காகிதக்கற்றைகள் அவன் கண்ணில்படுகிறது. அது, தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு மனிதன் எழுதிய கடிதம். இந்த இடத்தில் இருந்து, கிருஷ்ணனின் அறிமுகம் துவங்குகிறது.
இந்த திரைக்கதை உத்தி தான், கட்டப்பனையில ரித்விக்ரோஷன் படத்திற்கு மேலும் அழகூட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் திலேஷ் போத்தனின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. தமிழில் சமீபத்தில் வெளியான நிமிர் திரைப்படம் இதன் மறுஆக்கம் தான். ஆனால், அதைவிட திரைக்கதையில் காட்சிகளை அடுத்தடுத்து கோர்ப்பதில் ஒருபடி முன்னால் நிற்கிறது கட்டப்பனையில் ரித்விக்ரோஷன். 

நீண்டநாள் கழித்து எழுதவேண்டுமென்று ஆசை உந்தியவுடன், ’மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் திரைக்கதையைத்தான் ஒன்லைனராக எழுதிப்பார்த்தேன். அதனைத் திரும்ப வாசிக்கும்போது, எத்தனை கடினமான திரைக்கதையாக்கம் என்று புரிந்தது. அதுவே, கட்டப்பனையில ரித்விக்ரோஷனைப் பார்த்தபோது அமிழ்ந்துபோனது. 
வழக்கமான மசாலா சினிமாவையே அற்புதமான அனுபவமாக மாற்றும் ரசவாதம் இந்தப்படத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், இந்தப்படத்தில் மகேஷ் கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் ரெபரன்ஸ் செய்கிறார்கள். அந்த அளவுக்கு எள்ளல் தன்மை நிறைந்த வசன நகைச்சுவை படத்தில் உண்டு. சூழலே நகைச்சுவையாக மாறும் காட்சிகளும் உண்டு. அவலமே அங்கதமாக மாறும் அற்புதமும் உண்டு. 


நடிகனாக வேண்டுமென்ற கனவைப் பறிகொடுத்த தந்தைக்கு மகனாகப் பிறந்த ஒருவன், தற்செயலாக அதே கனவைத் தனக்கானதாக மாற்றுகிறான். கருத்த கிருஷ்ணன் என்று தந்தையும் அழைப்பதை நினைத்து தாழ்வுமனப்பான்மை கொள்ளும் ஒருவன், சினிமா நடிகன் என்ற அந்தஸ்தினால் அதனைச் சரிசெய்துவிட முடியுமென்று நம்புகிறான். அவனைப் பகடி செய்யும், சிக்கலில் மாட்டிவிடும் நண்பனொருவன் எப்போதும் உடனிருக்கிறான். அவனை ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணொருத்தி பக்கத்து வீட்டில் இருக்கிறாள். அவனது வாழ்க்கையே முக்கியம் என்று நினைக்கும் தந்தை வீட்டில் இருக்கிறார்.
இத்தனையும் இருந்தும் சினிமா நாயகனாக வேண்டுமென்ற ஆசையும், அழகான பெண் காதலியாக வரவேண்டுமென்ற ஏக்கமும் கிருஷ்ணனை அலைக்கழிக்கிறது. அந்த இரண்டுமே அவனது வாழ்வில் நிகழும் சாத்தியம் உண்டாகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
இதனைப் படித்ததும், நமது மனதில் ஒரு திரைக்கதை கண்டிப்பாக உருவாகும். ஆனால், அது அத்தனையுமே கட்டப்பனையில் ரித்விக்ரோஷன் படத்தில் பொய்த்துப் போகிறது. இத்தனைக்கும் வழக்கமான கமர்ஷியல் படங்களில் வரும் பாத்திரங்கள், காட்சியமைப்புகள், திரைக்கதை போக்குகளே இதிலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால், திரைக்கதையில் அந்த காட்சிகள் அங்குமிங்கும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. 

நமது பாஸ்போர்ட் புகைப்படத்தை துண்டுதுண்டாக வெட்டி கொலாஜ் படைத்து, அதனை நாமே பார்த்து அழகாக இருக்கிறது என்று வியந்தால் எப்படியிருக்கும்? இப்படத்தைப் பார்க்கையில் அதுதான் நடக்கிறது.
இந்த திரைக்கதையில் தற்கொலைக்கு முயற்சிக்கும் மூன்றாவது நபராக கிரிதர் என்ற பாத்திரம் வருகிறது. இவரைத் திரையில் காட்டும்போது, இந்த திரைக்கதையில் இவரைக் காட்டுவது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதற்கேற்றாற்போல, அந்த பாத்திரத்துக்கான முக்கியத்துவம் படம் நெடுகிலும் கொடுக்கப்படுவதில்லை. இறுதியில், அதற்கான பதில் கிடைக்கிறது. 
ஒரு மலையுச்சியில் தற்கொலை செய்ய அடுத்தடுத்து வரும் மூன்று மனிதர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதே படத்தின் முடிவு. மற்ற இரு பாத்திரங்களின் மனநிலையும், அவர்களது வாழ்க்கைமுறையும் இரண்டொரு காட்சிகளில் திரைக்கதையில் காட்டப்படுகிறது. 
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை. பாடல்களுக்கான இசையை, இயக்குனர் நாதிர்ஷாவே நிரப்பியிருக்கிறார். பாவனா வழக்கில் நடிகர் திலீப்புடன் இணைந்து கைதானவர்களில் இவரும் ஒருவர் என்பது, இந்த இடத்தில் குறிப்பிடத் தேவையற்ற தகவல். படத்தைத் தயாரித்திருப்பவர் அதே திலீப். பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருப்பவர் பிஜிபால். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களூம் தங்களது பங்களிப்பைச் சரியாக நல்கியிருக்கிறார்கள். 
நாயகனாக வரும் விஷ்ணு உன்னிமுகுந்தனும் அவரது நண்பராக வரும் தர்மஜன் போல்கட்டியும், இயல்பான கேரள மைந்தர்களை நம் கண்ணில் காட்டுகிறார்கள். சித்திக், சலீம்குமார், பிரதீப் கோட்டயம், கலாபவன் சாஜன் என்று தமிழ்சினிமா ஆர்வலர்கள் அறிந்த சில நடிகர்களும் படத்தில் உண்டு. 

பிரேம்நசீரும் சத்யனும் கோலோச்சிய காலத்தில், மலையாள சினிமாவில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியவர் நடிகர் ஜெயன். தமிழில், மகேந்திரன் இயக்கத்தில் பூட்டாத பூட்டுக்கள் படத்தில் நடித்தவர். இவருக்கென்று, தனித்த ரசிகர் கூட்டம் கேரளாவில் இப்போதும் உண்டு. பெல்பாட்டம் பேண்ட்களும் பிகினிகளும் சன்கிளாஸ்களும் நிறைந்த 80களின் கமர்ஷியல் சினிமா ட்ரெண்டை, மலையாளத்தில் பிரபலப்படுத்தியவர் ஜெயன். சோழவரத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தவர். இவரது ரசிகராக வருகிறார் நடிகர் சித்திக். 
அந்த காட்சிகளின் முக்கியத்துவம் அறிய, கண்டிப்பாக நாம் கேரள சேட்டன், சேச்சியாகத்தான் பிறந்திருக்க வேண்டும். தனக்கு அழகான மகனைப் பெற்றுத்தர வேண்டுமென்பதற்காகவே, ஜெயன் கெட்டப்பில் சித்திக் பெண் பார்க்கச் செல்லும் காட்சி அதற்கொரு உதாரணம். பெண்ணின் பெயர் சீமா என்று தெரிந்ததும், அவர் காட்டும் முகபாவனை ஒன்று போதும். சீமாவும் ஜெயனும் பல படங்களில் ஒன்றாக நடித்த நட்சத்திர ஜோடிகள் என்பது இதன் பின்னிருக்கும் தகவல். இப்படிப் படம் நெடுக, சின்னச்சின்ன விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. 
நம்மை நேசிக்கும் நபர்களை விட, நம் மனதை ஆக்கிரமிக்கும் கவலைகள் பெரிதா என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம். படத்தின் முடிவில் நாயகன் பெரிய நட்சத்திரமாக மாறவில்லை; வழக்கம்போல, தான் காதலித்த அழகான பெண்ணை விட்டுவிட்டு, தன்னை நேசிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். படத்தில் எந்தப் புதுமையுமில்லை; ஆனால், கண்டிப்பாக உங்களை ரசிக்க வைக்கும் இந்த கட்டப்பனையில ரித்விக் ரோஷன். 
ஒரு படத்தில் கிருஷ்ணன் ஏற்று நடித்த வேடமே, அடுத்தடுத்த படங்களிலும் அவனுக்குக் கிடைப்பது போன்று இதன் திரைக்கதையில் காட்டப்பட்டிருக்கும். எந்த மொழி சினிமாவானாலும், சினிமாவில் இதுபோன்ற க்ளிஷேக்கள் சர்வ சாதாரணம். ஆனால், அந்த க்ளிஷேக்களை வைத்துக்கொண்டே ஒரு கிளாசிக்கைப் படைக்க முடியுமா? முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் ‘கட்டப்பனையில் ரித்விக்ரோஷன்’. 
இந்தப்படத்தில் சிரிக்க, அழ, குதூகலிக்க, பெருமைகொள்ள, நெகிழ்ச்சியடைய எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. 

சாமான்யர்களுக்கு எப்போதுமே சரித்திர நாயகர்களாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலர் அதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள்; வெகு சிலர் அந்தப் பயணத்தைத் தொடர்வார்கள்; அவர்களில் ஒரு சிலருக்கே வெற்றி கிடைக்கும். அப்படியென்றால், மற்றவர்கள் எல்லாம் எந்த கனவுகளும் இல்லாமல் வாழ வேண்டுமென்று அர்த்தமா? இல்லை, இதற்கான பதிலை இந்தப் படம் தருகிறது. 
அதனால் தானோ என்னவோ, இந்தப்படத்தைத் தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் தனுஷ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தீனா, இதில் நாயகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கண்டிப்பாக, அவர் இந்தப் படத்தில் ஹிட்டடிப்பார். ஆனால், இவரது நண்பராக வரும் பாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு. இதுதவிர, படத்தில் வரும் மற்ற பாத்திரங்களுக்கும் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது நிச்சயம் குதிரைக்கொம்புதான். தனுஷ், கண்டிப்பாக சாத்தியப்படுத்துவார். 
உண்மையைச் சொன்னால், தமிழ் சினிமாவின் ரியல் ‘கட்டப்பனையில ரித்விக்ரோஷன்’ அவர்தான். கண்டிப்பாக, இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல; ஒருவேளை அவர் இதைப் படித்தால் புன்னகைக்கக்கூடும்!